13 ஜூன், 2013

இரவுகள்...

சுவர் ஓவியம் @ Pinang Malaysia
உலகில் பெரும்பாலோருக்கு இரவு என்பது ஓய்வுக்கான நேரம். ஆனால் என்போன்ற தனிமை விரும்பிகளுக்கு அது வேலை செய்வதற்காகவே படைக்கப்பட்ட ஒன்றாகும். இயற்கைக்கு எதிராகவே  நீ எப்போதும் இருக்கிறாய் என்பான் நண்பன். அவனுக்கு எல்லாம் நேரப்படி நடக்க வேண்டும். அது அவனை ஒரு நிறுவனத்தின் மேலாளராக உயர்த்த மட்டுமே உதவியது. தனிமை மிகப்பெரிய வரம், இரவும் அப்படித்தான். இரண்டும் ஒரு சேர கிடைத்தால் நாம் இறைவனாய் மாறலாம்.

ஊரில் இருந்தபோது காதலித்தவள் அகாலமரணம் அடைந்த இக்கட்டான தருணத்தில் நள்ளிரவில் ஊரின் எல்லைப்பகுதியில் இருக்கும் சுடுகாட்டிற்கு செல்வதுண்டு என்னைப்போலவே தனித்திருக்கும் பேய்கள் இருந்தால் அதனுடன் கொஞ்சம் அளவளாவி வரலாமே என்று தோனும். ஆனால் அப்போது பேய்களும் என்னை புறக்கணித்தன. மெல்லிய மதுவின் போதையில் என் தனித்த அழுகை வானுலகு சென்ற என் காதலியை ஒருபோதும் எட்டியதில்லை. தற்கொலை செய்து பார்க்கலாமா? எனும் ஆர்வம் மேலோங்கிய காலம் அது. அப்போதே போயிருக்கலாம் இத்தனை அவலங்களை கடந்து வாழும் இப்பேய் வாழ்வுக்கு அது உத்தமம் என இப்போது புரிகிறது. ஆனால் ராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதையைப்போல் வாழ்வென்னும் அடர்ந்த இருள்படர்ந்த இக்காட்டை கடந்து வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. கொடுத்த வாக்குகள் பல உண்டு காப்பதற்கு. சமீபத்தில் ஊருக்கு போனபோது அந்த சுடுகாட்டை சுற்றி நிறைய வீடுகள் இருந்தன.

சிங்கப்பூரில் இருந்தபோதும் தொடர்ந்து இரவு நேர வேலைகளை மட்டுமே விரும்பி செய்ததுண்டு. ஒரு பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில் பேய் இருப்பதாக சொல்லி இரவு நேர வேலைக்கு யாரும் வருவதில்லை என்றபோது நான் அங்கு ஒரு வருடத்திற்கும் மேலாக  தனியாளாக இரவு வேலை பார்ப்பேன். ஆனால் அங்கும் நானும், அப்பேயும் எங்கள் தனிமைக்குள் சந்தோசமாகவே இருந்தோம்.

எங்கு ஊர் சுற்றுவதாக இருந்தாலும் நண்பர்கள் இல்லாத தனித்த பயணங்களையே விரும்புவேன். எப்போதும் சகபயணியிடம் பேச விரும்பாத ஆள் நான். ஆனால் எல்லா பயணங்களும் அப்படி அமைந்து விடாது. சில நபர்கள் நம்மை வறுத்தெடுப்பார்கள். அப்படியான சில பயணங்களில் நான் வழியில் இறங்கி வேறு வண்டி மாறுவேன். சில சமயங்களில் மொத்த இரவையும் ஏதாவது ஒரு பேருந்து நிலையத்தில் கழித்ததுண்டு. இரவு நேர பேரூந்து நிலையங்கள் ஒரு சுவாரஸ்யமான அனுபவக்களம். பலதரப்பட்ட பெரும்பாலும் ஏழ்மை பாரம் சுமக்கும் உன்னதமான மனிதர்களை சந்திக்கலாம். இங்கிருக்கும் இரவு நேர டீக்கடைகளில் விடிய விடிய இளையராஜா இசைக்க ஐந்தாறு டீயும் மனதிற்கு நெருக்கமான விலாசங்கள் தேவைப்படாத சில மனிதர்களும் வாழ்வில் எல்லோருக்கும் கிட்டாத ஒன்று.


சில வருடங்கள் முன்பு வரைக்கும் இரவு நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை செய்திருக்கிறேன். இரவை தன் சிறிய வெளிச்சங்களால் விரட்டிப்பாயும் வாகனங்கள். சில்லிடும் காற்று. வழியில் நிறுத்தும் காவலர்கள். சம்யங்களில் முகம் தெரியாத நபர்கள் சிலரை ஏற்றிக்கொண்டு வழிநெடுக ஏதும் பேசாமல் கடைசியில் மனம் நிறைய நன்றிகளுடன் அவர்கள் விடைபெறும் தருணம். இவற்றை வயது காரணமாக இப்போது அனுபவிக்க முடிவதில்லை.

சென்ற மாதம் அப்பா தன் இறுதி நேரத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். அவ்விரவில் கொஞ்சம் கொஞ்சமாக அவர் இறந்து கொண்டிருந்தார். விடியற்காலை அவரின் மூச்சு முற்றிலும் அடங்கியபோது ஒரு தனித்த அழுகுரல் மெல்ல மெல்ல எங்கள் வீட்டை பலரின் அழுகுரல்களுடன் அந்நாள் முழுதும் நிரப்பின. தன் வாழ்வை தான் விரும்பியபடி அவர் வாழ்ந்து முடித்திருப்பாரா என்பதுதான் என் அப்போதைய கேள்வியாக இருந்தது.


சில நெருங்கிய உறவுகளின் இறுதி நேரத்தில் நான் உடன் இருந்திருக்கிறேன். இருபதாவது வயதில் மாமா ஒருவர் தலையில் அடிபட்டு சென்னை அரசு மருத்துவமனையில் 21 நாட்கள் கோமாவில் இருந்தார். அவரின் இறுதி நாளில் நான் மட்டுமே உடன் இருந்தேன். இறப்பதற்கு சில நிமிடங்கள் முன் அவர் நினைவு திரும்பினார். அவரின் விழிகள் என்னிடம் எதுவோ சொல்ல ஆசைப்பட்டன. ஆனால் கண்ணீர் வழியும் அவரின் விழிகளில் என்னால் எதுவுமே படிக்க முடியவில்லை. இரவு 8 மணிக்கு அவர் இறந்து போனார். மறுநாள் காலை அவர் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இரவுகள் எப்போதும் ஆசானாகவே இருந்து என்னை வழிநடத்தட்டும்.

12 ஜூன், 2013

காசு..பணம்..துட்டு..money..MONEY...

Photo : KRP Senthil
புன்னகையை தவறவிட்ட
ஒருவனின் தாயை 
அர்ச்சனை செய்த
வார்த்தைகளை பகிர்பவனிடம் 
இரண்டு மாத அறைவாடகை 
தர வேண்டும் 

பொதுக் கழிப்பிடத்தில் 
அவசரத்திற்கு நுழைந்தவனாய்
அனுதினமும்
ஓடி ஒளிகிறேன்

குறை தீர்க்கும் சாமி
மீடியேட்டர் ஐயர்
வாசல் பிச்சைக்காரன்
என் 
செருப்பை களவாண்டவன்
இன்றைய நாள்
இனிய நாள் அல்ல

மன வீட்டில் உலவும் 
புலி  ஒன்று 
பசிக்கு புற்களை மேய்கிறது
அம்மா உணவகமே
அமிர்தம்

கனவுப்பறவையொன்று 

எச்சமிட்ட விதை 
வளர்ந்து கனியாகி  
இன்றைய என் போதைக்கு 
ஊறுகாய் ஆனது..

கூடடையும் 
பறவைகள் அறிவதில்லை 
இரைக்கு காத்திருக்கும் 
பாம்புகளை....

29 ஏப்., 2013

அப்பா!...

KR.பன்னீர்செல்வம்
கே.ஆர்.பி என்று எங்கள் ஊர் பெரிசுகளால் அழைக்கப்படுகிற கே.ஆர்.பன்னீர் செல்வத்தேவர் அவர்கள் நேற்று காலை தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மூளையில் ஒரு முக்கிய நரம்பின் பாதிப்பால் தன் கடைசி மூச்சை நெருங்குகிறார் என தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் இன்று மாலை அறிவித்து விட்டார்கள்.

கிட்டதட்ட 90 வயதுக்குமேல் இருக்கும் அவர் தன் சிறிய வயதிலேயே  தகப்பனாரை இழந்து மிகுந்த போராட்டத்தில் தன் இளைய வாழ்வை கடந்தவர். மிகுந்த செல்வ செழிப்பு இருந்தாலும், அக்கா, தம்பி, தாயாருடன் ”கடுமையான விவசாயியாக திகழ்ந்தார்” என பாட்டி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஊரின் மிகப்பெரிய செல்வாக்குடைய எனது அம்மாவின் அப்பாவான சாமியார் என்கிற ஜெகதீசத்தேவர் அவர்கள் தானே முன்வந்து தனது இரண்டாவது மகளான எனது அம்மா சந்தானலட்சுமியை திருமணம் செய்து வைத்திருக்கிறார். இந்த சாமியார் என்கிற ஜெகதீசத்தேவர் பற்றி வாட்டாகுடி இரணியன் சரித்திரத்திலும், நமது கலைஞரின் “நெஞ்சுக்கு நீதியிலும்” சில செய்திகள் இருக்கிறது.

இளைமையிலேயே காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இனைத்துக்கொண்ட எனது தந்தையார் இன்றுவரை அதே இயக்கத்தில் இருக்கிறார். திருமதி. இந்திராகாந்தி அவர்களின் போது மட்டுமே அவர் அழுது நான் பார்த்திருக்கிறேன். அவர் அம்மா இறந்த அன்று கூட அவர் அழவில்லை. என் வீட்டில் ஒரு பக்கம் ராஜீவ்காந்தி படமும் இன்னொரு பக்கம் பிரபாகரன் படமும் இருக்கும். என் வீட்டிற்கு அப்பகுதி காங்கிரஸ்காரர்கள் அடிக்கடி வருவார்கள். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு வீட்டிற்கு வரும் காங்கிரஸ்காரர்கள் பிரபாகரன் படத்தை அகற்ற சொன்னபோது அது சின்னப்பையனுக்கு பிடித்த விசயம் என மறுத்துவிட்டார்.

ஒருமுறை எனக்கு பணம் கொடுக்கனுன்னு ஒருத்தனை ஆள் வைச்சு தூக்கிட்டு வந்திட்டோம். அப்ப அவன் எனது தந்தையாருக்கு போன் செய்ய அவரோ என்னை “காசு தரலேன்னா தூக்கிட்டு வருவியா?. ”இது தப்பான விசயம், மொதல்ல அவன விடுன்னு!” சொன்னார்.

அதன்பிறகு ஒருநாள் ”தம்பி கடன் கொடுப்பதாக இருந்தால், திருப்பி தரலேன்னா கூட பரவாயில்லை அப்படின்னா மட்டும் கொடு”  அதேபோல “கடன் வாங்குவதாக இருந்தால், திருப்பிக்கொடுக்கும்போது வாங்கும்போது இருக்கும் அதே மனநிலையில் இருக்க வேண்டும் “ என மகாபாரதக்கதையை உதாரணம் காட்டி அறிவுரை சொன்னார்.

2002 ஆம் ஆண்டு எனது தயாருக்கும், எனது மனைவிக்குமான கருத்து வேறுபாட்டில் நான் வீட்டைவிட்டு வெளியேறியபோது அவர் இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கவில்லை. மேலும் நான் சம்பாதித்த பணத்தை தன் மற்ற பிள்ளைகளுக்கு கொடுத்தார். நிலத்தின் மீதான வருமானம் உள்ளிட்ட எதுவும், எப்போதும் எனக்கு தரவில்லை. அந்த வருத்தம் எப்போதும் அவர்மீது எனக்கிருந்தது. ஆனால் சமீபத்தில் அவர் நண்பர் ஒருவர் என்னிடம் அப்பா அது பற்றி பேசியதாக சொன்னார். நான் எப்படியும் சம்பாதித்து பெரிய ஆள் ஆவேன் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும். அதனால்தான் மற்ற பிள்ளைகள் மேல் காட்டிய அக்கறைய என்னிடம் காட்டவில்லை என்று சொன்னதாக சொன்னார். 

எனது மூத்த மகன் ஒரு வயதாக இருக்கும்போது ஒருமுறை ஊருக்கு அழைத்து சென்று காட்டினேன். இரண்டாவது மகன் பிறந்து நாலு வயது முடிந்துவிட்டது. இன்றுவரைக்கும் அவனை அவர் பார்க்காததுதான் அவரின் மிகப்பெரிய வருத்தம். கண் பார்வை முழுதும் போன நிலையில் கடந்த மாதம் என் பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு ஊருக்கு போனபோது பத்தாண்டுகள் கழித்து வீட்டிற்கு போனேன். எனக்கு மட்டும் அவர் எதுவுமே செய்யவில்லை என வருத்தப்பட்டார். ”தான் கூடிய விரைவில் இறந்துவிடுவேன். அம்மாவை பாத்துக்க” என்றார். ”மே மாதம் லீவில் பசங்களை அழைத்து வந்து காட்டுகிறேன்” என்றேன்.  

இன்றைக்கு பிள்ளைகளை ஊருக்கு அழைத்துப்போகிறேன். ஊருக்குப்போகிறவரை அவர் உயிருடன் இருப்பாரா? எனத்தெரியாது. ஆனாலும் கிரமத்தின் அத்தனை பேரின் மதிப்புக்குரியவராக, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவராக, இன்றுவரை கிராமத்தின் அனைத்துக்கட்சி விவசாய சங்கத்தலைவராக, நல்ல பஞ்சாயத்தாராக அவர் தக்கவைத்திருக்கும் நற்பெயரை தனது பேரப்பிள்ளைகளுக்கு அவர் விட்டுசெல்கிறார்.

25 ஏப்., 2013

சகவாசம்...

Photo : KRP Senthil
சகவாசம் என்றால் என்ன என்பது மாதிரியான ஆராய்ச்சிகளை நிறையபேர் நிறைய மாதிரி செய்திருக்கிறார்கள். அத்தனையும் அவர்களின் சொந்த அனுபவத்தில் கிடைத்த பேரதிர்ச்சிகளாக இருப்பதற்கான காரனம் அவர்கள் உதிர்க்கும் தத்துவ முத்துக்கள் அ வாந்திகள் மூலம்,  அதன் வரலாறு அறியப்படுகிறோம். இப்படித்தான் சின்ன வயசுல...ன்னு ஆரம்பித்து ரம்பமாக நம்மை கூறு போடும் ஜந்துக்கள் அவை அ அவர்கள். ஆனாலும் பாலியல் கதைகளைக்காட்டிலும் சில கதைகள் ஒரு படி கீழிறங்கி சுவராஸ்யமாக அமைந்துவிடுகின்றன. அடுத்தவன் அவஸ்த்தைப்பட்டால் அதைவிட சுவாரஸ்யம் வேறெங்கும் கிட்டாது.
இப்படித்தான் நண்பன் ஒருவன் தனது அடுத்த படத்துக்கான கதையை என்னிடம் சொல்ல ஆரம்பித்தான். கவனிக்க அவன் சொன்ன மாதிரியே சொன்னால் நீங்கள் அனேகமாக இந்தப்பத்தியில் இருந்து விலகிவிட நேரிடும் என்கிற அபாயம் இருக்கிறது. எனவே சுருக்கமாக:
கதை நாயகன்: ஒரு சாக்கடை அள்ளும் தொழிலாளி.
கதை நாயகி: ஹன்சிகா மோத்வானி மாதிரி ஒரு பேரழகி (சைசிலும்).
கதை: நாயகிக்கு ஒரு காதல் தோல்வி இருக்கும்போதே குடும்ப வறுமை காரனமாக நாயகனுக்கு வாழ்க்கைப்பட நேர்கிறது. ஆனாலும் நாயகன் செய்யும் தொழில் பிடிக்காததால் இருவரும் இணை சேராமல் இருக்கிறார்கள்...  அலோ எங்க ஓடுறீங்க. அதுக்குள்ளயும் முழுக்கதையும் புரிஞ்சிடுச்சா என்ன?

கிளைமாக்ஸ் : இப்படி ஒரு பெயரில் காண்டம் விற்பது கூட தெரியாத எதிர்கால சினிமாவை தீர்மானிக்கப்போகிற டைரக்டராக அவன் எப்படி வரப்போகிறான் என்கிற சந்தேகம் எனக்கு இருந்தாலும். முடிவு அவன், நான், நீங்கள் மற்றும் கோடானு கோடி தமிழ் ரசிகர்கள் தெரிந்து வைத்திருப்பதுதான்.

” நாயகனை, நாயகி ஏற்றுக்கொண்டு விடுவாள்” ஆனால் கதைப்படி என்பதையும் தாண்டி ஹன்ஸிகா மாதிரி ஒரு அழகி சாக்கடை எல்லாம் எப்படி இனி அள்ளப்போகிறாள்” என்கிற எனது கவலையை அன்றைய தினம் கதை சொன்ன எதிர்கால டைரக்டருடன் டாஸ்மாக் சரக்கு அடித்து தீர்த்துக்கொண்டேன்.
பிரபல திரை விமர்சகரிடம் இந்தக்கதையை சொன்னபோது ரொம்ப அசிங்கமா இருக்கிற உதவி இயக்குநர்கள் எல்லோரிடமும் இப்படி ஒரு கதை இருக்கும் என சொன்னார். ”ஏங்க அழகுன்னா அது செவப்பா இருக்கிறதா?” என ரொம்ப அப்பாவியாக கேட்டேன்.

“ஃபேர் அண்டு லவ்லி பத்தி நீ என்ன நெனக்கிரே?”ன்னு கேட்டார். அது ஏன் எல்லாரும் நாம ஒரு கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லாம, அவங்க நம்மகிட்ட ஒரு கேள்வி கேக்குராங்க??

ரொம்ப போரடிக்கிறேன்ல,
சகாக்களை நாம் தண்ணியடிக்கும்போது விரிவாக அறியலாம்:

முதல்வகை: முதல் கட்டிங்கில் ரொம்ப தெனாவெட்டாக சப்ளையரை கூப்பிடும் அத்தனை பிதாமகன்களும் மூன்றாவது உள்ளிறங்கி ரசவாதம் ஆனபின் சப்ளையரை அண்ணா, மாப்ள, தலைவா ரேஞ்சுக்கு உயர்த்தி கடைசியில் நம் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாய் கொடுத்து வள்ளல் ஆகிறவர்கள்.
அடுத்த வகை:ஆங்கிலத்தை எல்லா மொழிகளுடனும் மிக்சியில் அரைப்பார்கள். இந்த பயலுகளுக்கு ஆங்கிலம் நல்லாத்தெரிந்த ஒரு பிகரை உஷார் பன்னமுடியாத ஆதங்கம். ஆனா பாருங்க சப்ளையருங்களுக்கு மட்டும் இவனுங்க மொழி அத்துப்படி.
மூனாவதா ஒருத்தன் இருக்கான் பாருங்க அவந்தான் வெரி டேஞ்சரஸ் ஃபெலோ. பிளான் பன்னியே குடிக்கிறவனுங்க. தனக்கான பிராண்டில் ஆரம்பித்து, மிக்சிங், சைட் டிஷ் கடைசியாக ஒரு ஃபுல் பிரியாணி என தன் தேவையை சரியாக தெரிந்து வைத்திருக்கும் ஆளு. சாப்பாடு முடிஞ்ச ஒடனே அவன் மொபைலுக்கு அவென் பொண்டாட்டியிடமிருந்து(என்னா ஒரு டைமிங்கு) போன் வரும்.  பயளும் ரொம்ப நல்லவனா மாறி எல்லாருக்கும் வணக்கம் வச்சிட்டு ஆட்டோக்கு பணம் வாங்கிட்டு போயிடும். அதுலயும் நாலு கிலோ மீட்டர்ல இருக்கிற அவென் வீட்டுக்கு போக எல்லா ஆட்டோக்காரரும் 200 ரூவா வாங்குவாங்கன்னு இவென் சொல்றத போதையில இருக்கிற மத்த பயளுங்க எப்படி நம்புறானுவன்னு இன்னி வரைக்கும் புரியல.

என்னிய மாதிரி ஆளுங்களுக்கு பெரச்சனை இல்ல. எவ்ளோ போட்டாலும் என் பைக் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்திடும்.
ஆனா பாருங்க இந்த டாஸ்மாக் சரக்கு அவ்ளோவும் டூப்ளிகேட்தான் மறுநா முதுகு ஏன் வலிக்குதுன்னு தெரியல. தல சாருவும் இதே கம்ப்ளெயிண்ட் பன்றாரு. அதனால இப்பல்லாம் தமிழ்நாட்டு சரக்கு அடிக்கிறதே இல்ல. எவனாவது காசு கொடுத்து ஸ்லோ பாய்ஷன் வாங்குவானா?.
இதனால மான்புமிகு, இதயதெய்வம், புரட்சித்தலைவி, தமிழக முதல்வர், அம்மா அவர்கள் என்போன்ற என்னற்ற பயபுள்ளைகளை திருந்த வாய்ப்பளித்த காரனத்தால் “அம்மா ஆட்சியே நல்லாட்சி” என அப்துல்லா, அபிஅப்பா, சவும்யன், லக்கி, ப்ரகாஷ் போன்ற உ.பி க்களுக்கு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

இப்படி சகவாசம் எண்ணிலடங்கா நன்மை, தீமைகளை கலந்துகட்டி நம்மை செம்மைபடுத்தவே செய்கிறது என்று சொன்னால் மிகையாகாது!!

எங்கூர்ல எனக்கு ஒரு அத்தை இருந்தாங்க. ரொம்ப வயசானவங்க, கெட்ட வார்த்தைகளை கவிதையா பேசுவாங்க, அதேமாதிரி கோவம் வந்தா கடுமையான சாபமும். இப்பிடியாப்பட்ட அத்தைக்கு பரம சாதுவான ஒரு புருஷன்  எங்க மாமா. அவரும் சின்னப்பசங்க மாதிரி நாங்க சொன்ன அவ்வளவு வேலையும் செய்வாரு, ராவானா வயக்காட்டுல  நாங்க இளவட்டங்க தண்ணியடிப்போம், பகல்ல நரிக்குறவனிடம் காசு கொடுத்தால் அன்றைய தினம் கிடைக்கும் பறப்பன, நடப்பன, ஊர்வன இப்படி ஏதாவது ஒன்னு கொண்டுவந்து தருவான். அதுதான் அன்றைய ராத்திரி சைடு மற்றும் மெயின் டிஷ்.  அப்புறம் ரொம்ப நாளைக்கு நரிக்குறவன் எங்கூர் பக்கம் வரல. ஒரு நாள் எங்க கூட்டாளி நல்ல சேவலா பாத்து ஒன்ன ஆட்டைய போட்டு வந்துட்டான். மாமாதான் வெவரனையா சமைச்சு கொடுத்தாரு. சட்டிய கழுவவே தேவையில்லாத அளவுக்கு மிச்சம் சொச்சத்தையும் அவரே முடிச்சாரு. ஆனா பாருங்க அடுத்த நாள் ”கீழால போயிட்டே இருக்குடா” ன்னு வயக்காட்டுலயே படுத்துட்டாரு.

அப்ப கோழிய ஆட்டைய போட்டு வந்த சேக்காளி விழுந்து, பொரண்டு சிரிச்சான்.

“ஏண்டான்னு” பொரடில ஒன்னு செல்லத்தட்டா மாமா தட்டி கேட்டாரு?

”அதில்ல மாமா, அத்தெ விட்ட சாபம் ஒனக்கு மட்டும் பலிச்சிருச்சின்னு” மறுபடியும் விழுந்து சிரிச்சான்.

அப்பத்தான் தெரிஞ்சது பய மாமா வீட்டு கோழியத்தான் ஆட்டைய போட்டிருக்கான்னு!?

ஏன்னா அத்தை வையுற மொத வார்த்தையே “ பேதில போவான்னு!” தான்.

”இதுக்குத்தான் சின்னப்பசங்க கூட சகவாசம் வச்சிக்ககூடாதுடான்னு!” சொல்லி தலையில அடிச்சிகிட்டாரு மாமா

22 ஏப்., 2013

பாலை நிலமாக மாறப்போகும் திருவாரூர், தஞ்சை பகுதிகள்...

படம் : விஜயகுமார்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருகாலத்தில் விளங்கிய ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டம் (இப்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்) காவிரியில் கர்னாடாக கைவைத்த பின் முப்போகம் விளைந்த நிலங்கள் இருபோகமாக மாறி பின் ஒருபோகம் என்றாகி சென்ற வருடத்தில் வறட்சியில் ஒருபோகமும் வீணாகிப்போனது. பெரும்பாலான ஆற்றுப்பாசன நிலங்களுக்கு இதுதான் நிலமை என்றாலும் பணம் படைத்தவர்கள் பெரும் பொருள் செலவில் ஆழ்குழாய் கிணறுகளை தோண்டி நிலத்தடி நீரை பல இடங்களில் 800 அடி வரைக்கும் நீர்மூழ்கி மோட்டார்களைக் கொண்டு உறிஞ்சிவிட்டனர். இலவச மின்சாரம் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க அரசுகள் மாற்றி மாற்றி தள்ளுபடி செய்த கடன்களால் பணக்காரர்களே அதிகம் பயனடைந்தனர். இப்போது இலவச மின்சாரம் தடைபட்டதால் நிறைய நிலச்சுவாந்தார்கள் தென்னை விவசாயத்துக்கு மாறினர். இப்படியாக நமது பாரம்பரிய விவசாயத்தை நாமே குழிதோண்டி புதைத்துக்கொண்டிருந்தபோது நம்மாழ்வார் எனும் கடவுள் தோன்றி நமது பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுத்துகொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசு ஒட்டு மொத்தமாக அத்தனை விவசாயிகளுக்கும் ஆப்படிக்கும் வேலையை துவங்கியிருக்கிறது.

மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளடங்கிய திருவாரூர், தஞ்சை மாவட்டங்களின் விவசாய நிலங்களை மீத்தேன் படுகைகள் என அறிவித்து அவற்றை எடுப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே ஒரிஸ்ஸா, நாகாலாந்து பகுதிகளில் இயற்கை வளத்தை தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுத்த மத்திய அரசு இங்கும் The Great Eastern Energy Corporation Ltd எனும் தனியார் நிறுவனத்துக்குத்தான் உரிமம் வழங்கியிருக்கிறது.

மீத்தேன் வாயு எடுப்பதால் விளைநிலத்தில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தஞ்சை திரு.விஜயகுமார் தனது முகநூல் பக்கத்தில் விளக்கியிருக்கிறார். அது :

சோறு வேணுமா அல்ல கரி வேணுமா ?
***********************************
நிலக்கரிப் படுகை மீத்தேன் (நி.ப.மீ) என்றால் என்ன? நிலத்தடியில் நிலக்கரி இருக்குமானால், அந்தக் கரிப்பாறைகளில் உள்ள நுண்துளைகள் வழியே, கரிப்பாறைகளுக்கு அடியில் இருக்கும்மீத்தேன் வாயு ஊடுறுவி வெளிவரும். இது நிலக்கரிப் படுகை மீத்தேன்
ஆகும். (Coal Bed Methane) இங்கே நிலக்கரியை வெட்டி எடுப்பதுவேலையல்ல. கரிப்பாறை நுண்துளைகள் வழியே மீத்தேன் வளியை
உரிஞ்சி எடுப்பதே வேலை.

நி.ப.மீ எப்படி எடுக்கப் படும்?
****************************
ஆழ்துளைக் கிணறுகள் வேட்டி, முதலில் 500 முதல் 1650 அடி ஆழம் வரை உள்ள நன்னீரை அசுர நீர் இறைப்பிகளால் இறைத்து வெளியே விடுவார்கள். அப்படி இறைக்கும் போது, நன்னீருடன் உப்பு, அமிலமும், கரியும் கலந்து கெட்ட நீராக மாறிவிடும்.

அப்படி கெட்டதாக மாறிய நீரை பாசனத்திற்கும், குடிக்கவும் பயன்படும் வாய்க்கால்கள், ஆறுகள் போன்ற ஓடைகளின் வழியே வெளியேற்றுவார்கள்.

நிலத்தடியில் இருந்த நன்னீர், கெடு நீராக மாறியதொடு, வாய்க்கால், ஆறுகள், ஓடைகளில் ஓடும் நன்னீரையும் கெடு நீராக மாற்றி விடும்.

இப்படி நீரை இறைத்து வெளியேற்றியவுடன், அசுர உரிஞ்சிகளால் நிலக்கரிப் பாறைகளில் இருக்கும் நுண் துளைகள் வழியே வரும் மீத்தேனை உரிஞ்சி எடுப்பார்கள்.

இப்படி எடுக்கப் பட்ட வளியை பெருங்குழாய்கள் வழியே பிற மாநிலங்களுக்கும், சிங்களத்துக்கும், சிறிது தமிழ்நாட்டுக்கும் அனுப்புவார்கள். அந்தப் பெருங்குழாய்த் திட்டத்துக்கும் கூடுதல் நிலம் தேவைப்படும்.

நி.ப.மீயால் ஏற்படக் கூடிய கெடுதிகள் என்ன?
****************************************
விளைநிலங்கள் கரி நிலங்களாக மாறும்.
* நிலத்தடி நன்னீர் வறண்டு போகும்.
* மேலும் நன்னீர் நிலத்தடியில் வறழ வறழ, கடலோரப் பகுதி என்பதால், கடல் நீர் நிலத்தடியில் புகுந்து விடும்.
* இறைக்கப் படும் நீரால் சுற்றி வேளாண்மைக்காக ஓடும் நீர் நிலைகள் மாசு பட்டு பயனற்றுப் போகும்.
* துவக்கத்தில் 1,66,000 ஏக்கர் என்று குறிக்கப் பட்டிருக்கும் அளவில் 80 கிணறுகளையும் தோண்டி விட்டால், அந்தப் பகுதியின் நீரும் சுற்றுச் சூழலும் கெட்டு விடுவதால் மெல்ல மெல்ல வேளாண்மை மங்கும்.
* காவிரிப் பாசனப் பகுதி எங்கும் நிலத்தடியில் மீத்தேனும் நிலக்கரியும் இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள் என்பதால், 80 கிணறுகளுக்குப் பின்னர் அசுர வேகத்தில் 800, 8000 கிணறுகள் என்ற அளவில் அது மீத்தேன் கிணறுகள் பெருகும்.
* தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பெயர் பெற்றிருந்த தஞ்சை நெற்களஞ்சியம், கரிக்களஞ்சியமாக மாறும். இது தமிழ்நாட்டின் முதன்மையான வாழ்வாதாரத்தை அழித்து விடும்.
* மீத்தேனுக்குப் பின்னர் நிலக்கரியில் கைவைப்பார்கள். பெட்ரோலும் அங்கிருந்து வரக் கூடும்.
* வேளாண்மையை கைவிட்ட மக்கள் ஆரம்பத்தில் நிலங்களை விற்றுக் கிடைத்த காசில் சிறிது பகட்டாக இருந்தாலும் ஓரிரு தலைமுறைகளில் கரிக்களஞ்சியத்தின் கூலித் தொழிலாளிகளாய், பாலாவின் பரதேசி திரைப்படத்தில் வரும் பரதேசிகளாக ஆகிவிடுவர்.
* பசுமையான செழிப்பான மிக அகண்ட வேளாண்மைப் பகுதியில் வெட்டப்பட்ட சுரங்கங்கள், ஆழ்கிணறுகள் காலப் போக்கில் வற்றிவிட அவற்றைக் கைவிட்டு நிறுவன்ங்கள் வேறு தொழிலுக்குப் போய்விடும். பின்னர் “Abandoned Mines and deep wells” என்ற பெயரில் பயனற்று மண்மேடாகப் போகும். பல ஆயிரம் ஆண்டுகள் பச்சையாக இருந்த நிலங்கள் அரை அல்லது ஒரு நூற்றாண்டில் பாலையாக ஆகிப் போகும்.

* நிலத்தடியில் உள்ள கரிம வளங்களைப் பயன்படுத்துதல் உலக நடப்புதானே - செய்தால் தொழில் பெருகுமே என்று கருதலாமா?

தஞ்சை என்பது அடர்ந்த வேளாண் பகுதி. அந்த வேளாண்மை தமிழ்நாட்டின் அச்சாணிகளில் முதன்மையானது. தமிழ்நாட்டின் பொருளாதாரமும் தொடர்ந்த செழிப்பும் இதனூடே வருவன. ஒரு நாட்டின் வேளாண்மையும், தொழிலும் ஒன்றை ஒன்று அழிக்காமல் பெருக வேண்டும். ஒன்றை அடித்து ஒன்றை வளர்ப்பது, ஒரு கண்ணைப் பொட்டையாக்கிக் கொள்வதற்குச் சமம். வளர்ந்த மேனாடுகள் யாவற்றிலும் இந்தப் பண்பாட்டையும் கட்டுப்பாட்டையும் காணலாம்.
நி.ப.மீ திட்டத்தை ஏற்கக் கூடாததற்குக் காரணங்கள் யாவை!
*****************************************************
* வேளாண்மைக் களஞ்சியத்தை அழித்து கரிக்களஞ்சியம் கட்டுவது பொன்முட்டையை நிதமும் இடும் வாத்தை அறுத்து உடனடியாக நிறைய பொன்முட்டைகள் வேண்டும் என்பதற்குச் சமம் என்று கூறலாம்.
* அடர்ந்த, முதன்மையான வேளாண் நிலங்களை வலிந்து கரிக்களஞ்சியமாக ஆக்குவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பலனளிக்கும். ஆனால் வேளாண் களஞ்சியமோ என்றைக்கும் பலனளித்து வந்திருக்கிறது; வரக்கூடியது.

*கரிக்களஞ்சியம், தமிழ்நாட்டிற்குச் சிறிதும், பிற நாடுகள் மாநிலங்களுக்குப் பெரிதுமாகப் பலனளிக்கும். ஆனால், வேளாண் நெற்களஞ்சியமோ பெரிதாக தமிழ்நாட்டிற்கும் சிறிதாக பிற நிலங்களுக்கும் பலன் தரும். அதன் தன்மை அப்படியானது. ஆக, நெற்களஞ்சியமே 10 கோடி மக்களுக்கு அதிகம் பலன் தருவது. அந்தப் பொருளியலை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளாவிட்டால் தன் கண்ணில் தானே அமிலம் இட்டுக் கொள்வதாகவே பொருள்.

*தமிழ்நாட்டிற்குப் பிற மாநிலங்கள் தரவேண்டிய நீரளவும், நீர் உரிமையும் ஆழ்ந்த வணிக அரசியலால் தடுக்கப் பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மாநிலங்களும் நாடுகளும் தமிழர்களுக்கு எதிரிகளாக உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் தொன்மையான செல்வங்கள் மருத வளமும், நெய்தல் வளமும் ஆகும். தமிழ்நாட்டு மருத வளம், நீர்ப்பங்கீட்டு ஓரவஞ்சனையால் வறட்சிக்குட்படுத்தப்படுகிறது. நெய்தல் வளம் சிங்களரால் சுட்டுக் கொல்லப்பட்டுச் சீரழிக்கப் படுகிறது. தமிழக் கடற்கரையைச் சுற்றிய கடற்பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களும் பன்னாட்டு வணிக அரசியலுக்குள் வந்து விட்டன.

ஆகவே, இந்த இரண்டு வளங்களையும் விட்டு விட்டால் பாலாவின் பரதேசிகளாய், அடிமைகளாய்த் தமிழ்க் குலம் மேலும் மாறிப்போகும். இதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

தற்போதைய மீத்தேன் முனைப்புகளை, மன்னார்குடியில் இருந்து வடக்காகக் கோடு கிழித்து நெய்வேலியைத் தொட்டுப் பார்த்தால் இங்கே வெட்டப் படும் கிணறுகள் இறைத்து வெளியிடும் நீர் கிழக்காகத்தானே ஓடும்? மேற்குக்கு கிழக்குதான் நம்மூரில் பள்ளம்! ஆக, தற்போது குறைவாக (80) வெட்டப்படும் கிணறுகள் வெளியேற்றும் மாசு நீர் கடற்கரை வரை எல்லாப் பயிர்களையும். எல்லா நிலங்களையும், எல்லா ஊர்களையும் ஏப்பமிட்டு விடும் என்பது உண்மைதானே? அது என்ன சிறிய நிலப் பரப்பா? நாக நாடு முழுதும் காலியாகிவிடுமல்லவா? விழித்திருந்து ஏமாறலாமா? நம் விரலைக் கொண்டு நம் கண்ணைக் குத்திக் கொள்ளலாமா?
 
இத்தகைய தகவலை மக்களுக்கு தெரியப்படுத்திய சமுக சிந்தனையாளர் நாக.இளங்கோவன் அவர்களை வாழ்த்த ஒவ்வொரு தமிழனும் கடமை பட்டிருக்கவேண்டும் .

கரிக்களஞ்சியத்தை மறுத்து நெற்களஞ்சியத்தைக் காப்போம்!

உங்களுக்கு சோறு வேணுமா கரி வேணுமா முடிவு செய்து கொள்ளுங்கள் ....
இப்படிக்கு,
Vijay Kumar

தொடர்புடைய சுட்டிகள்:
 
  
Secrecy over coal based methane project fuels row